Monday 9 April 2012

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு- அரசாணை பிறப்பிப்பு


தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு- அரசாணை பிறப்பிப்பு


Jayalalitha        
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது வாசித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அரசால் தீட்டப்படும் திட்டங்களை செயல்படுத்துவதிலும், நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப் படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள்.

இதே போன்று எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ- மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சிறந்த செல்வமாம் கல்விச் செல்வத்தை போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை ஆற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை எனது தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது.

அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், 1.1.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியது போல், தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் 1.1.2012 முதல் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.1.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,383.49 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
MyFreeCopyright.com Registered & Protected