Monday 27 August 2012

6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி

    ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
     ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.

தலைவர் பேட்டி:

   தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

தரமானதேர்வு:
  தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்., 3ல் மீண்டும்...:  
  அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.


மாற்றம் இல்லை:
   tகேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார். 

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்...

Posted: 25 Aug 2012 08:15 PM PDT
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் வருமாறு
:-

தமிழ் - 1,778

ஆங்கிலம் - 5,867

வரலாறு - 4,185

புவியியல் - 1,044

கணிதம் - 2,606

இயற்பியல் - 1,213

வேதியியல் - 1,195

தாவரவியல் - 518

விலங்கியல் - 513

தெலுங்கு பண்டிட் - 12

உருது பண்டிட் - 1
MyFreeCopyright.com Registered & Protected