Thursday 31 May 2012


ஏற்கனவே திட்டமிட்டபடியே பள்ளிகள் திறக்கப்படும்


ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பொதுத்தேர்வும், தள்ளிப்போனது.

ஆனால் இந்தாண்டோ, பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, புதுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினியோகிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி 1ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதன்பின், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள். எனவே, 4ம் தேதி திங்கட்கிழமையில் இருந்து பள்ளிகளை துவங்குவதற்கு, பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
வேலை நாட்கள் விவரம்: பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூன் 1ல் துவங்கி, 2013 ஏப்ரல் 20ம் தேதி வரை, 200 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 2013 ஏப்ரல் 30ம் தேதி வரை, 220 நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
MyFreeCopyright.com Registered & Protected