Wednesday 16 May 2012

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்கப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி



கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் கீழ், துணைக் குழுவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இக்குழு, விரைவில் அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.

வல்லுனர் குழு
: பள்ளிகளில், தற்போது கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, கல்வித் தரத்தை மேம்படுத்த, அமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஒரு வல்லுனர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இதில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, சென்னை பல்கலை, கல்வியியல் துறை முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன் உட்பட, ஒன்பது பேர் இடம்பெற்று உள்ளனர்.

கூட்டத்தில் முடிவு: இக்குழுவின் முதல் கூட்டம், அமைச்சர் தலைமையில், 11ம் தேதி சென்னையில் நடந்தது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான கல்வித்திட்ட முறையில் உள்ள குறைகளை கண்டறிதல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், வல்லுனர் குழுவின் கீழ், ஒரு துணைக் குழுவை அமைத்து, அதில் கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட, பல தரப்பினரையும் இடம்பெறச் செய்து, அவர்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்று ஆய்வு செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விரைவில் துணைக்குழு: இதுகுறித்து, அமைச்சர் சிவபதி கூறியதாவது: விரைவில் துணைக்குழு அமைக்கப்படும். அதில், அனைத்து தரப்பினரையும் சேர்த்து, கருத்துக்களை பெறுவோம். துணைக் குழுவில் இடம் பெறுபவர்கள், விரிவாக ஆய்வுசெய்து, வல்லுனர் குழுவிற்கு அறிக்கை தருவர்.

வல்லுனர் குழுவும், விரிவாக ஆய்வுசெய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவை எடுக்கும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கான பணிகளும், விரைவில் துவங்கும்.

இவ்வாறு சிவபதி கூறினார்.

நன்றி:

 

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத்த கமிட்டி


கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார அளவில் 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வட்டார அளவில் 30 பேர் கொண்ட விழிப்புணர்வு கமிட்டி அமைக்கப்படுகிறது.

இக்கமிட்டியில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், என்.எஸ்.எஸ்.,மாணவர்கள், பெற்றோர்கள், என்.ஜி.ஓ.,க்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஆசிரிய பயிற்சி மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்றுநர் இடம் பெறுகின்றனர். இக்கமிட்டி 3 பேர் கொண்ட 10 குழுக்களாக பிரிந்து சென்று குடியிருப்பு பகுதிகளில், நாடகங்கள், பாட்டு,தெருக்கூத்து மூலம் கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விளக்குகின்றனர். பேனர்கள் வைத்தும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு தெரிவிப்பார்கள்.

ஜூன் முதல் வாரம் துவங்கி ஆண்டு முழுவதும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நன்றி:

முப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி

முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு தொடங்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புத்தக சுமையை குறைக்க திட்டமிட்டு, முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட உள்ளது.

முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அந்த வகையில் ஒரு முழு கல்வியாண்டு என்பது மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் ஒரே புத்தகம் தயார் செய்யப்பட உள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையில் ஒரு புத்தகமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு புத்தகமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு புத்தகமும் என்ற அடிப்படையில் புத்தகத்தின் அளவு குறைக்கப்படுகிறது. புதிய முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை, முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. படிப்படியாக எல்லா அதிகாரிகளுக்கும் அளிக்கப்படும். முதல் கட்டமாக மாவட்ட கல்வி அலுவலர்கள் 74 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்று (15ம் தேதி) அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர்கள் 32 பேர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் 15 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
16ம் தேதி 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 32 அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் கல்வித் துறை சார்பில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வகுப்புகள் வாரியாக ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, உபரியாக உள்ள ஆசிரியர் விபரம், காலியிடங்கள் விபரம், கூடுதலாக தேவைப்படுகிற ஆசிரியர்கள் ஆகியன சேகரிக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த பட்டியல் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முன் பள்ளி அளவில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், இவ்வாறு நிரப்பப்பட உள்ளது.

உபரி ஆசிரியர்கள் அருகில் உள்ள பிற பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு நியமிக்கப்படுவர். இதனை தொடர்ந்து ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஆசிரியர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

சென்னையில் மே 15,16 தேதிகளில் முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆன்லைன் முறையில் பள்ளிகளிலேயே பிளஸ் 2, 10ம் வகுப்பு கல்வி தகுதி பதிவு செய்யும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப் படுகிறது. அத்துடன் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்தும் ஆலோசனை நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

 
MyFreeCopyright.com Registered & Protected