Wednesday 16 May 2012

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்கப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி



கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் கீழ், துணைக் குழுவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இக்குழு, விரைவில் அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.

வல்லுனர் குழு
: பள்ளிகளில், தற்போது கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, கல்வித் தரத்தை மேம்படுத்த, அமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஒரு வல்லுனர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இதில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, சென்னை பல்கலை, கல்வியியல் துறை முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன் உட்பட, ஒன்பது பேர் இடம்பெற்று உள்ளனர்.

கூட்டத்தில் முடிவு: இக்குழுவின் முதல் கூட்டம், அமைச்சர் தலைமையில், 11ம் தேதி சென்னையில் நடந்தது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான கல்வித்திட்ட முறையில் உள்ள குறைகளை கண்டறிதல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், வல்லுனர் குழுவின் கீழ், ஒரு துணைக் குழுவை அமைத்து, அதில் கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட, பல தரப்பினரையும் இடம்பெறச் செய்து, அவர்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்று ஆய்வு செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விரைவில் துணைக்குழு: இதுகுறித்து, அமைச்சர் சிவபதி கூறியதாவது: விரைவில் துணைக்குழு அமைக்கப்படும். அதில், அனைத்து தரப்பினரையும் சேர்த்து, கருத்துக்களை பெறுவோம். துணைக் குழுவில் இடம் பெறுபவர்கள், விரிவாக ஆய்வுசெய்து, வல்லுனர் குழுவிற்கு அறிக்கை தருவர்.

வல்லுனர் குழுவும், விரிவாக ஆய்வுசெய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவை எடுக்கும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கான பணிகளும், விரைவில் துவங்கும்.

இவ்வாறு சிவபதி கூறினார்.

நன்றி:

 

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected