Sunday 29 April 2012

கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்


கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்

"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது.

இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பழனிச்சாமி கூறினார். 

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected