Tuesday 15 May 2012


320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்

வரும் கல்வியாண்டில், 320 பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவக்க, பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அறிவிப்பு
:பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் சிவபதி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், வரும் கல்வியாண்டு முதல், ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், தலா இரண்டு ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவங்கப்படும். முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றது.

பணி தீவிரம்:இன்னும், 15 நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தீவிரமாக நடந்து வருகின்றன.தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஐந்து பள்ளிகள்; பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள ஐந்து பள்ளிகள் என, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான 10 பள்ளிகள், தேர்வு செய்யப்படுகின்றன.

ஓரிரு நாளில் தயார்:எந்தெந்த பள்ளிகளை தேர்வு செய்வது என, இரு துறைகளை சேர்ந்த இயக்குனர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில், 320 பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாராகி விடும். அதன்பின், இப்பள்ளிகள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த வகுப்புகளில், தலா 40 மாணவர்கள் வரை சேர்க்கப்பட உள்ளனர். இத்திட்டத்தின் மூலம், 22 ஆயிரத்து 400 மாணவர்களை, ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகளில் சேர்க்க திட்டமிடப் பட்டு உள்ளது. ஆங்கில வழி சேர்க்கைக்கு அமலில் உள்ள, தனி கட்டண முறைபடியே, இந்த வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தனி ஆசிரியர்கள் கிடையாது:ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் ஆரம்பித்தாலும், இப்போதைக்கு இதற்கென தனி ஆசிரியர்களை தேர்வு செய்யாமல், பணிபுரியும் ஆசிரியர்களில் ஆங்கில வழியில் படித்தவர்களை தேர்வு செய்து, ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகளில்பணியமர்த்தவும், கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.வரும் ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் துவங்கி, பின் படிப்படியாக பிளஸ் 2 வரை, ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவக்கப்படும்.அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, ஏற்கனவே மாநகராட்சி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் இருந்து, ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தனியாக நடத்தப்பட்டு வருகின்றன. சட்டசபை அறிவிப்பின் மூலம், படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்படும்.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected