Thursday 28 June 2012

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் 
க. இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். 

பல்வேறு உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு தேவைக்கு அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேறு சில பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை 32 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 2012 மே மாதத்தில் கணக்கெடுத்துள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்திட உத்தேசித்துள்ளது. உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த தேவைக்கு அதிகமாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யப்படுவார். இதுபோல பணியிட மாறுதல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடக்கும். 

பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளில் குறைவான தேவையே இருப்பதால் இப்பணி முழுமை அடையவில்லை. வருகிற 28, 29-ம் தேதி நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் ஏற்படும் காலிப்பணியிடம் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடம் இவற்றை கணக்கிட்டு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நிரவல் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) தகவல் தெரிவித்துள்ளது. 

வெளி மாவட்டத்திற்கு எந்தவொரு பட்டதாரி ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் மாறுதல் செய்யப்படமாட்டார்கள். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 15-25ம் தேதிக்குள் நடத்தி முடித்திடவும் பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
. 

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected