Wednesday 31 October 2012

இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம்!


இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம்!


இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை,
மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய செய்யக்கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன.
தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம் தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும் தெரியவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி, இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம் இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

என்னென்ன கிடைக்கும்? இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும் வரும்போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள் என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected